Tuesday 26 March 2013

ஏழை அப்பன்கள்..!

இரண்டு நாட்களுக்கு முன் மாலை அலுவலகம் முடிந்து அயனாவரம் நோக்கி சென்று கொண்டிருந்தேன். கெல்லீஸ் சிக்னலை தாண்டியதும் பாலம் ஏறி இறங்கினால் இடதுபக்கம் HBI கல்லூரி இருக்கிறது. அதன் நடைப்பாதையில் ஒரு சிறு கூட்டம். 

என்னவென்று எட்டிப்பார்த்தால் ஒரு பழைய சைக்கிளைப் பிடித்தவாரு எலும்பும் தோலுமாக 35 வயது மதிக்கத்தக்க லுங்கி கட்டிய நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். சைக்கிள் கேரியரில் அவரது 4 வயது மகன் பெரும் குரலெடுத்து அழுதபடி அமர்ந்திருந்தான். கண்ணீர் வற்றாமல் வடிந்து கொண்டிருந்தது. அவனது குதிகாலின் பின்பகுதியில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. தோற்றத்திலேயே குடிசைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.

``என்னாச்சு சார்..” என்றேன்.

``எனக்கு பின்னாடி வேகமா வந்த பைக்காரன் சைக்கிளை இடிக்கிற மாதிரி ஓவர் டேக் பண்ணான் சார். பையன் பயந்துபோய் காலை சைக்கிள் சக்கரத்துக்குள்ள விட்டுட்டான்..” என்றார் சோகமாக. பையனை பார்க்க பரிதாபமாக இருந்தது.

அந்த ரோட்டை ஒட்டியே கல்லூரியின் சிறிய மருத்துவமனை இருக்கிறது. ``சரி.. இந்த ஆஸ்பிட்டல்ல காட்டுங்க..” என்று கூறியவாரு வண்டியை நகர்த்தினேன்.

ஆனால் அவர் அதை காதில் வாங்காமல் பையனை பின்னாடி உட்கார வைத்தபடியே சைக்கிளை உருட்ட ஆரம்பித்தார்.

எனக்கு கொஞ்சம் கடுப்பாகிவிட்டது. ``சார்.. பையனுக்கு ரத்தம் வடியுது.. பக்கத்துலயே கிளீனிக் இருக்கு.. காட்டுங்கன்னா.. கண்டுக்காம போறீங்க..” என்று கோபத்தில் கொஞ்சம் சத்தமாக சொல்லி முடிக்கவில்லை... `` பணமில்ல சார்..” என்றார் பரிதாபமாக.

அப்படியொரு பதிலை நான் எதிர்ப்பார்த்திருக்கவில்லை.. அதைக் கேட்டதுமே எனக்கு ரொம்ப சங்கடமாகிவிட்டது.

அவரே தொடர்ந்து ``இங்க நெறைய காசு கேட்பாங்க.. அதான் வீட்ல போய் மஞ்சள் வச்சு கட்டு போடலாம்னு போறேன்..” என்று சொல்லியவாறு மீண்டும் சைக்கிளை உருட்ட ஆரம்பித்தார்.

அவரைப் பிடித்து நிறுத்தி சிறுவனைக் கிளீன்க்கிற்குள் கூட்டிப்போய்.. சிகிச்சை அளிக்க வைத்து அனுப்பினேன். சிறுவன் போகும்போது சிநேகமாய் ஒரு சிரிப்பு சிரித்தான்.

வீடு வந்து சேர்ந்த பின்னரும்... ``பணமில்ல சார்..” என்ற அவரின் வார்த்தையும் அந்த இயலாமை முகமும் தொந்தரவுப் பண்ணியபடியே இருந்தது. ஒரு கணம் அந்த ஏழை தந்தையாக நானும்.. ரத்தம் சொட்ட அமர்ந்திருந்த சிறுவனாக இளமாறனையும் நினைத்துப் பார்த்தேன்.. அந்த கற்பனையே பெரும் துன்பமாக இருந்தது.

அம்பானிகளும் டாடா பிர்லாக்களும் வாழும் இந்த புண்ணிய பூமியில்..
நீங்கள் கார்களிலும் பல்ஸர்களிலும் பறக்கும் இதே சாலைகளில்..
கையில் பணமில்லாமல் சைக்கிளில் குழந்தைகளுடன் எண்ணற்ற ஏழை அப்பன்களும், பயணிக்கிறார்கள் என்பதை மட்டும் கொஞ்சம் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.. அவர்களும் வாழ்ந்துவிட்டு போகட்டும்.. :(


Ref: Facebook.com

0 comments:

Post a Comment